Ads 468x60px

Thursday, March 7, 2013

மகளிர் தினம்! படித்ததில் பிடித்தது! - வாழ்கையை நழுவ விடாதே!


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! (08/03)

ங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திடவேண்டும்! இந்த கூற்று எந்தளவுக்கு உண்மையோ? இன்றைய பெண்கள் நிலை அப்படி உள்ளது! அடிமையாய் இருந்தார்கள், அடக்கியாண்டார்கள் , அடங்கிபோனார்கள், இப்போது இயந்திரகதிக்கு உள்ளானார்கள்!! 

அதுசரி சிலர் தங்களுக்குள் முணுமுணுப்பது எனக்கு தெரிகிறது.. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.. அப்படி நினைத்துகொள்ளுங்கள் ஆண்களே! இங்கே நான் ஆதங்கபட்டது பெரும்பான்மையான பெண்களின் நிலையை பற்றி!! 
***************************************************************************************************************************
ரண்டு நாட்களுக்கு முன், என் தோழரின் அலுவலகத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் மனைவியை அடித்து உதைக்க, அதற்கு தூபம் போட்டது, அவரின் அம்மா மற்றும் சகோதரிகள். அடிவாங்கிய மனைவி அக்கம் பக்கம் இருக்கும் ஆட்களை கத்தி கூப்பிட்டு தன்னை காப்பாற்ற கெஞ்சியும் எவரும் தலையிடாத அற்புத இடம் இந்த நகரம் (நரகம்).
அடிவாங்கியவளும் பெண், அடிப்பதற்கு தூண்டுவதும் பெண். பெண்ணுக்கு பெண் தான் என்றும் எதிரி என்ற சொல் என்று தான் நீங்குமோ?
**************************************************************************************************************************
தே மங்கையர் தினத்தில் ஒரு அருமையான மகளிர் குறித்த நாவலை பற்றி எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கையை நழுவ விடாதே!

"ஜீவிதம் சேஜாரநீகு" எனும் திருமதி D. காமேஸ்வரி எழுதிய தெலுங்கு நாவலை, தமிழில் திருமதி. கௌரி கிருபானந்தன் "வாழ்க்கையை நழுவ விடாதே" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். 

ஒரு நாவல் தன் மூலத்திலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதன் சுவை, அர்த்தம் குன்றாமல் கொடுப்பது மொழிபெயர்பாலரின் திறத்தையும் அவரின் கிரகிப்பு தன்மையையும் பொறுத்தது. அந்த வகையில் நம் மொழிபெயர்ப்பாளர் தமிழ் வாசகர்களுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்சொன்ன இந்த நாவலை படிக்கும் படி எனக்கு பரிந்துரைத்தவர் கௌரி அம்மா தான். அதற்காகவே என் தனிப்பட்ட நன்றிகள். இல்லையென்றால் இப்படிப்பட்ட எழுத்துக்களை தவறவிட்டு இருப்பது நிச்சயம். கடந்த புத்தக கண்காட்சியில் இதுபோல சில மொழிபெயர்ப்பு நாவலைகளை வாங்கினேன். 

அவற்றில் நான் படித்து ரசித்த இந்த நாவலைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்த புத்தகம் என்னை அவ்வளவாக கவரவில்லை முதல் இரு பக்கங்கள் படிக்கும் வரை. அதன் பின்பு முடிக்கும் வரை ஆவல் குன்றவில்லை. இது தான் இதன் சிறப்பு. 

இனி கதைசுருக்கம்:

வித்யா - இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த கடைக்குட்டி பெண். வீட்டுக்கு செல்ல மகள். முதுகலை MA படித்துகொண்டு இருக்கிறாள். கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நிர்மலாவுடன் வித்யா நெருங்கிய தோழியாகிறாள். வித்யாவின் சுபாவம் அனைவரையும் கவர்ந்து விடும் கலகலப்பான குணம். நிர்மலாவை பற்றி வித்யாவிற்கு தெரிந்ததெல்லாம் அவள் ஒரு கல்லூரி விரிவுரையாளர், திருமண செய்யாமல் தனியாக வாழ்கையை சுதந்திரமாக அனுபவிப்பவள். 

வித்யாவின் முதுகலை இரண்டாம் வருடம் அவளுக்கு பிரபாகரனுடன் திருமணம் நிச்சயமாகிறது. பிரபாகரன் வித்யாவிற்கு நேர் எதிர் குணம். அதிகம் பேசமாட்டான். இது முதல் பார்வையிலேயே வித்யாவிற்கு ஒரு உறுத்தலையும், தன் குணத்திற்கு ஒத்து போவானோ என்ற பயத்தையும் உண்டுபண்ணிவிட்டது. நிர்மலா தரும் தைரியத்தின் பேரில் திருமணதிற்கு சம்மதிக்கிறாள். தன் முதுகலை படிப்பு முடிய ஆறு மாதமே இருக்கும் நிலையில் திருமணம் நடைபெறுகிறது. முதலில் வரதட்சணை ஏதும் வேண்டாம் என சொல்லும் பிரபாகரன் குடும்பத்தார் பிறகு சீர் செய்யவில்லை என வந்த முதல் நாளே வித்யாவை ஏசுகின்றனர். இதற்கு அவள் கணவனும் உடந்தை. மேலும் கணவன் தன் பெற்றோர் மீது அளவுகடந்த கண்மூடித்தனமான பாசம் வைத்திருப்பவன். மனைவியை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அடங்கி நடக்க வேண்டும் என நினைப்பது மேலும் வித்யாவை கோபமாக்குகிறது. 

ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்குவாள் கணவனின் அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு இருந்தால்! கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறி கூவலாம்! அதுவே கேள்விக்குறியாக இருந்தால் அந்த வாழ்கையே நரகம் என்ற நிலையில் வித்யா மனமுடைந்து போகிறாள். திருமணமான இரண்டு மாதங்களிலேயே வாழ்க்கை முடிவுக்கு வந்ததுபோல ஒரு விரக்திக்கு உள்ளாகிறாள்.

தன் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு செயல்களுக்கு கூட தன் பெற்றோரின் அறிவுரை, அனுமதி வேண்டும் என நினைக்கும் கணவனுடன் வாழ்வதைவிட வெட்டியாய் பிறந்த வீட்டில் இருப்பதே நலம் என, தன் சகோதரனின் திருமணத்திற்காக வரும் வித்யா திரும்பி செல்வதை தவிர்க்கிறாள். இதனால் கோபமடையும் பிரபாகரன் தன் பெற்றோரில் மூலம், மகளை திருப்பி அனுப்புமாறு அவளின் பெற்றோருக்கு கடிதம் எழுதுகிறான். 
பிறந்த வீட்டிற்கு வரும் வித்யாவை பார்க்க நிர்மலா வருகிறாள். வித்யாவின் பிரச்சனைகளை கேட்டு, பொறுத்திருக்குமாறும், அவசரம் வேண்டாம் என அறிவுறுத்துகிறாள். இதனால் தன் உணர்வுகளை மதிக்கவில்லை என மேலும் கோபமடையும் வித்யாவை வழிக்கு கொண்டுவர, தன் கடந்த கால வாழ்கையை அவளுக்கு எடுத்துக் கூறுகிறாள் நிர்மலா.

நிர்மலா ஒரு பட்டதாரி பெண், வித்யாவை போல மூன்று மகன்களுக்கு இடையே ஒற்றை மகளாய் பிறந்து சீராட்டி வளர்க்கப்பட்டவள். திருமண வாழ்வில் தோல்வியுற்று, முன்கோபம் பெண்கள் முன்னேற்றம், சுயகௌரவம் என கணவனுடம் நிரந்தரமாக பிரிந்து தந்தையின் ஆதரவுடன் பிறந்தவிட்டில் தஞ்சம் அடைகிறாள். பிறந்த வீடு அவளுடையதாக இருந்தாலும், தனக்கென ஒரு வாழ்க்கை அமைந்த பிறகு, அதை உதறி விட்டு வரும் பெண்களுக்கு பிறந்த வீட்டின் ஆதரவும் தஞ்சம் தான்! இதை மிக ஆழமாக நாவலில் சொல்லப்பட்ட விதம் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று! 

பிரிந்து சென்ற மனைவி மறுமணம் செய்யாதிருக்கும் பொருட்டு, அவளின் கணவன் விவாக ரத்து கொடுக்க மறுக்கிறான். தந்தை ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞ்சராக இருந்தும் தன் மகளின் வாழ்க்கைக்கு வழி தேட முடியாமல் திணறும் இடத்தில் நம் பெற்றோரை கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர்!  தனக்கு பின் ஆதரவில்லாத மகளின் பாதுகாப்பிற்காக தன் சொத்தில் ஒரு லட்சம் ரொக்கத்தையும், பல லட்சம் பெறுமானமுள்ள வீட்டையும் தன் மகள் பெயருக்கு எழுதிவைத்து விட்டு உலகபந்தகளை விட்டு பிரிகிறார். 

தங்கைக்கு கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு தங்களை விட அதிகம் என அண்ணன்கள் கோபமுற்று வீட்டை விட்டு தன் குடுபத்துடன் வெளியேறுகிறார்கள். இதனால் அந்த பெரிய வீட்டில் நிர்மலாவுக்கு கிடைப்பது தனிமை என்ற சிறை தான்! 

இது மட்டுமல்லாது சமுதாயத்தில் கணவனிடம் இருந்து பிரிந்து  வாழ்பவள் என்ற நிலையில் பரிதாபத்திற்கு பதிலாக, ஆனவகாரி, குடும்பம் நடத்த தெரியாதவள், வாழாவெட்டி போன்ற பட்டங்களை சுமக்கிறாள். நிர்மலா வாழ்க்கையில் படும் இன்னல்களை மிக தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. இப்படிபட்ட தனிமரமான வாழ்க்கை வித்யாவிற்கு வந்து விட கூடாது என அவளை நல்வழிபடுத்த தன் கதை முழுவதையும் சொல்கிறாள். 

ஆனாலும் ஆவேசமுரும் வித்யா, ஆண்களுக்கு அடிமைபடுத்த சொல்வதாக நிர்மலாவையே கோபித்துகொள்கிறாள். அவளை சமாதானபடுத்தி வித்யாவிற்கு நிர்மலா கொடுக்கும் ஆலோசனைகள், இன்றைய பெண்கள் அனைவருக்கும் தேவையானவை.

"கணவனிடம் இருக்கும் கெட்டகுணங்களை மட்டும் ஆராயாமல் அவனிடம் இருக்கும் ஒரு நல்ல குணத்தை எடுத்து சொன்னாலே அவன் மனம் குளிரும். வாழ்கையில் நம் கற்பனை கதைகளில் வருவதை போல கணவன் இந்திரனாக சந்திரனாக கற்பனை செய்து, பின் ஏமாற்றம் அடையாமல், ஒருவரை அவரின் குணங்களோடு நெருங்கினால் வாழ்க்கை என்றுமே சுவர்க்கம்! திருமணம் ஆன புதிதில் கணவனை தன் விருப்பத்திற்கு மாற்றுவதில் தான் மனைவியின் திறமையும் அடுத்த 50 வருட குடும்ப வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது; அவன் களிமண் என்றால் மாற்றுவது சற்று எளிது, அதுவே கருங்கல்லாக இருந்தால், உளிகொண்டு செதுக்கத்தான் வேண்டும். கைவலிக்கும் என்று விட்டு விட்டால் வாழ்க்கையும் நழுவி விடும். கணவனே வேண்டாம் எனக்கு வேலை இருக்கிறது சொந்த சம்பாத்தியம் இருக்கிறது பிழைத்து கொள்வேன் என இருபதில் முழங்கினாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் உன் எண்ணத்தில் மாற்றம்  வரும். அப்போது,  தவறவிட்ட, கடந்துபோன காலங்களை எண்ணி உன் நிகழ்காலம் சுமையாகிவிடும். 

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவருக்கு வாழ்க்கை சீக்கிரம் வெறுத்து விடும். தனக்கென நல்லவனோ கெட்டவனோ ஒரு கணவன், தனி குடும்பம்,  மணியான குழந்தைகள் இவைகளுக்கு,  நீ ஏங்கும் போது அதை விட்டு வெகு தொலைவில் இருப்பாய் என்னை போல!" இப்படி பலவகையில் சொல்லி வித்யாவை கரையவைக்கிறாள் நிர்மலா. 

இந்த அறிவுரையில்லாம் அவள் பிரபாகரனுடன் வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக அல்ல, எவருக்குமே ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அந்த வாய்ப்பை தவறவிட்டால்  பின் தன் வழியை பின்பற்ற வேண்டியது தான்! அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை தான் வித்யா பிரபாகரனுக்கு கொடுக்க வேண்டும் என நிர்மலா உந்தினாள். 

அந்த உந்துதலுக்கு பலனாக, வித்யா தன் கணவனுடன் சேர்ந்து வாழ சென்றாள். இயல்பில் சற்று கோபகாரியான வித்யா தன் கணவனிடத்தில் கோபத்தை வெளிகாட்டாமல், முதலில் அவன் போக்குக்கு சென்றாள். இது பிரபாகரனிடத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிறது. அவனுக்கு மனைவியின் பேரில் காதல் பெருக வழிவகுத்தது. இதை புரிந்து கொண்ட வித்யா மேலும் தன் கோப தாபங்களை அடக்கி அவன் பெற்றோரிடமும் இன்முகத்துடன் நடந்து கொண்டாள். ஒரு கட்டத்தில் தன் பெற்றோரை காட்டிலும் மனைவிதான் தன் இறுதிவரை வருபவள், தனக்காணவள், தன் கவலைகளுக்கும் இன்பதுன்பங்களுக்கு வடிகால் என்பதை புரிந்து கொள்கிறான். நிர்மலாவின் முயற்சியால் வித்யாவின் வாழ்க்கை வண்ணமயமாகிறது!

பெண்மை எனபது மிக மென்மையானது. அதை அன்பை கொண்டு எப்படிவேண்டுமானாலும் வளைக்கலாம். அதிகாரத்தை கொண்டு அடக்க நினைத்தால் நிம்மதி மட்டும் அல்லாது, வாழ்க்கையும் அழிந்து விடும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த எடுத்துகாட்டு! அதே சமயத்தில் ஒரு பெண் நினைத்தால் சீர்கெட்ட தன் இல்லறத்தை நல்லறமாக மற்ற முடியும் என்பதை இந்த நாவல் நமக்கு விளக்குகிறது!

இந்த நூல் கிடைக்கும் இடம்: Alliance Company, 244 RK Mutt Road, Mylapore, Chennai. 600004,  044 2464 1314. 

இப்படிப்பட்ட நாவல் அவசியம் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் படிக்க வேண்டும் என்பது என் ஆசை!!

மிக நீண்ட இந்த பதிவை பொறுமையுடன் படித்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்!! 

அன்புடன்,
சமீரா

20 comments:

 1. வாழ்த்துக்கள்... (என்னைப் பொருத்தவரை... எல்லா நாட்களும்)

  சிறப்பிற்கு... புரிதலுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கிரேட் சார்... மிக்க நன்றி!!

   Delete
 2. மகளிர் தினத்திற்கேற்ற பதிவு.
  பெண்களும் கொஞ்சம் பொறுத்துப் பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாமும் நம் வாழ்க்கையிலிருந்து திரும்பிப் போக முடியாத தூரத்தை கடந்து வந்த பின் வருந்திப் பயனில்லை.

  அருமையான கதையை வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி மேடம்! பெண்கள் பொறுமையோட சிந்திச்சா எப்பவுமே நல்லது!!!

   Delete
 3. மகளிர்தின சிறப்புப் பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துகள் சமீரா1

  ReplyDelete
 4. பெண்மை என்பது ஆண்மைக்கு எதிரானது அல்ல என்று பல பெண்கள் புரிந்து கொள்ளுவதில்லை. விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.
  நல்லதொரு நாளில் நல்லதொரு பதிவைக் கொடுத்திருக்கிறாய் சமீரா!
  மகளிர் தின வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க!! போர்க்கொடி தூக்கிட்டு இருந்தாதான் மதிப்பாங்கன்னு நினைக்கறது பெரிய தப்பு....நன்றி அம்மா!!

   Delete
 5. ஒருவரை அவரின் குணங்களோடு நெருங்கினால் வாழ்க்கை என்றுமே சுவர்க்கம்! -இதுதான் சரி சமீரா. ஒவ்வொருவரையும் அவரரவர் பிளஸ் மைனஸோடு ஏற்றுக் கொண்டு அன்பைப் பொழிந்தால் வாழ்வே பசுஞ்சோலைதான். மிக அருமையான கருத்தைச் சொல்லும் நாவலை ரசித்துப் படித்து எங்களுக்கும் பகிர்ந்திருககிறாய். நன்றி மற்றும் என் இனிய நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையில முக்கியமா நான் புரிஞ்சிகிட்ட பாயிண்ட் இதுதான் சார்.. பிறரை மாற்ற நினைக்கறதுக்கு முன்னாடி நம்மால மாற முடியுமான்னு கொஞ்சம் யோசிச்சாலே போதும்.. நன்றி சார்

   Delete
 6. என்ன சொல்வதென்றே தெரியவில்லை சமீரா...!

  நீங்கள் நாவலை எப்படிப் படித்தீர்கள் என்று சொன்னீர்களோ, அப்படித் தான் இந்த பதிவை நான் படித்தேன். உங்களின் வார்த்தை பிரயோகம் உண்மையில் அற்புதமாக இருக்கிறது.

  ”அடிமையாய் இருந்தார்கள், அடக்கியாண்டார்கள் , அடங்கிபோனார்கள், இப்போது இயந்திரகதிக்கு உள்ளானார்கள்!!”
  இந்த வரிகளே என்னை மேலும் படிக்கத் தூண்டியது. அடக்கியும் , அடங்கியும் இருந்தவர்கள் இயந்திரகதிக்கு உள்ளானார்கள். இதை நிறைய முறை பொதுவாக இருபாலருக்கும் நான் யோசித்திருக்கிறேன்.
  கதை எப்படியிருக்கிறதோ ஆனால் உங்களின் கதைப் பற்றிய பதிவு உண்மையில் கதையைப் படிக்கத் தூண்டுகிறது.
  பொறாமையாகவும் இருக்கிறது. எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயோ ராஜா!! நான் படித்த புத்தகங்கள் உங்களைவிட குறைவுதான்.. எனக்கு தெரிந்தவரையில் எழுதி இருக்கிறேன்.. உங்கள் வார்த்தைகள் எப்போதுமே எனக்கு உற்சாகத்தை கொடுகிறது.. ரொம்ப நன்றி ராஜா உங்கள் வேலைப்பளுவில் எனக்காக நேரத்தை ஒதுக்கியதற்கு!!

   Delete
 7. ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்குவாள் கணவனின் அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு இருந்தால்!//

  திருமணப் பரிசாக தரத்தக்க நாவல்! உங்க பதிவும் அத்தகையதே... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக திருமண பரிசாக கொடுக்க தரமுள்ள நாவல் இது!! நன்றி நிலாமகள்!!

   Delete
 8. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.....

  நீண்ட நெடுங்கதை.... பிறகு வந்து படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்.. நேரம் கிடைக்கும் போது படியுங்கள்!

   Delete
 9. ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்குவாள் கணவனின் அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு இருந்தால்!//

  உண்மையாக, எதை வேண்டுமென்றாலும் சுலபமாக தாங்கலாம், அதேபோல் சாதிக்கலாம்..

  ReplyDelete
 10. அருமையான தளம். நான் தங்கள் தளத்தின் பின்தொடர்பவர்கள் பகுதியில் இணைகிறேன். என் தளம்

  தமிழ்மொழி.வலை ( www.thamizhmozhi.net )

  ReplyDelete
 11. நல்லதொரு தள அறிமுகம்... பாலகணேஷ் அண்ணா மூலமாக...
  திருமண வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 12. அருமை...நல்லதொரு பணி..!

  ++++++++++++++

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete