புத்தாண்டில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!!!
சமீபத்தில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய என் கருத்தை இங்கு பகிர்கிறேன்.
எவ்வளவு படித்தாலும் அவற்றில் சில மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள மனம் விரும்பிடும். அப்படிப்பட்ட நாவல் தான் இப்போது உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வது.
தெலுங்கு நாவல்கள் பல படைத்து "நாவல் ராணி" என எல்லோராலும் புகழப்படும் திருமதி. யத்தனபூடி சுலோச்சனா ராணி அவர்களின் நாவலை தமிழில், திருமதி. கௌரி கிருபானந்தன்
"முள்பாதை" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுபோல சுலோச்சனா ராணி அவர்களின்
பல நாவல்களை திருமதி கௌரி அம்மாவினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 |
கௌரி கிருபானந்தன் |
முள்பாதை எனும் நாவல் பற்றிய என்னுடைய பதிவு உங்களுக்காக:-
கதை சுருக்கம்:
மீனா என்கிற மீனாக்ஷி - பிரபல வக்கீல் திரு. ஆனந்த ராவ், மகளிர் சங்க தலைவி திருமதி. கிருஷ்ணவேணி தம்பதிகளின் ஒரே செல்வ மகள். மிக செல்லமாக வளர்க்கப்பட்டவள். அதே சமயத்தில் அவளின் ஒவ்வொரு அசைவும் அம்மாவால் செதுக்கப்பட்டது. நடை, உடை, பாவனை பழகும் விதம் எல்லாம் கிருஷ்ணவேணி அம்மாவின் கட்டளைப்படியே நடக்கிறது.
இந்த நாவல் முழுவதும் "தன்வினையில்" மீனா விவரிப்பது போலவே பயணிக்கிறது. இது என்னையே மீனாவாக உணர வைத்தது.
மீனாவின் மேல் அவளின் அம்மா செலுத்தும் ஆதிக்கம் "தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் திரைப்படத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒருவேளை இந்த நாவலின் தழுவலாகவே தெலுங்கில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
தன சுய விருபத்திற்கு இடமளிக்காமல் அம்மாவின் ஆசைக்கு அனைத்தையும் செய்யும் மீனா, ஒரு கட்டத்தில் அம்மா மீது அதீதமாக கோபமடைகிறாள். அம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்ற காரணத்தினாலேயே சாரதியை மணக்க மீனா விரும்பவில்லை. இதனால் அவன் தன் வீட்டில் தங்க வரும் நேரத்தில், அப்பாவின் ஒன்று விட்ட தங்கையான கமலாவின் வீட்டிற்க்கு முதல் முறையாக பயணமாகிறாள் மீனா. மேலும் வெளியூர் சென்ற தன் தாயாருக்கு தெரியாமல் அப்பாவின் உதவியோடு பயனப்படுகிறாள். இதுவே அவள் வாழ்கையின் திசையை மாற்றுகிறது.
மீனா அப்பா பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் பிரியமான கணவர். அன்பான அப்பா. தன் சுயத்தை இழந்தவர் 'வீட்டில்' மட்டும். மனைவியின் மீது கொண்ட அன்பால் தன் தங்கை குடுபத்துடன் நேரடியான உறவு பலத்தில் இல்லாமல், தங்கையின் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனான கிருஷ்ணன் மூலமாக உறவை தொடர்கிறார். கிருஷ்ணன் அவர் தங்கை குடும்பத்தில் தூண். தந்தை மறைவுக்கு பின் மூன்று தங்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள மூத்த மகன்.
மீனா தஞ்சை பக்கத்தில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கும் தன் அத்தை வீட்டிற்க்கு ஒரு வாரம் விருதாளியாக செல்கிறாள். அங்குள்ள எளிமை, ஒருவர் மீதான மற்றவரின் பாசம், பற்றுதல் அவளை ஈர்க்கிறது. நகரத்தில் தன் குடும்பத்தில் இல்லாத ஒன்றான பாசம் பரிவு இவற்றை அந்த கிராம வீடு அவளுக்கு கொடுகிறது.
அத்தை மகள் ராஜியுடன் அவள் நெருங்கி பழகி உயிர் தோழியாகிறார்கள். இருவருக்கும் இடையே அழகான ஒரு பூ நட்பாக மலர்கிறது.
ஆனாலும் அவளால் அங்கு நெருங்கமுடியாத உறவாக இருப்பது கிருஷ்ணன் தான். சில நாட்களில் இனம் புரியாத சண்டையில் இருக்கும் கிருஷ்ணன் மீது இன்னதென்று சொல்லமுடியாத ஒரு 'பூ' மலர்ந்து மணம் வீசுகிறது. அதை அவர்கள் "நட்பு" என்கிறார்கள். ஒரு பக்கம் சாரதி-யுடனான திருமண ஒப்பந்தம் மறு பக்கம் கிருஷ்ணன். முடிவு எடுக்க முடியாமல் மீனா திண்டாடுகிறாள்.
இந்நிலையில் குத்தகை நிலத்தை சொந்தமாக்கிகொள்ளவும், தங்கையின் திருமணதிற்கு வரதட்சணை கொடுக்கவும் தன் சுயவிருப்பம் இல்லாமல் சுந்தரி என்ற பண்ணியார் பெண்ணை திருமணம் செய்ய கிருஷ்ணன் ஒப்புகொள்கிறான்.
தங்கையின் திருமண சமயத்தில் மீண்டும் மீனா மேலடூருக்கு வருகிறாள். அந்த சமயத்தில் அப்பாவிடம் பேசி சண்டைபோட்டு அந்த குத்தகை நிலத்தை கிருஷ்ணன் பெயருக்கு மாற்றிய பத்திரத்துடன் கிருஷ்ணனை சந்தித்து கொடுக்க விரும்பியும் அவள் மீண்டும் வருகை தருகிறாள். ஆனால், விதிவசத்தால் அவள் தனிமையில் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருப்பதை சுந்தரி பார்த்து, கோவபட்டதொடல்லாமல், தன் திருமணத்தையும் நிறுத்தி, மறுநாள் நடைபெறவிருக்கும் ராஜியின் திருமணத்தையும் நிறுத்துகிறாள்.
இதனால் மனமுடைந்து ராஜியை தன்னுடன் ஊருக்கு அழைத்து செல்கிறாள் மீனா. அங்கு சாரதி ராஜியின் அடக்கம் பண்பு இவரால் ஈர்க்கப்பட்டு, மீனவுடனான திருமணத்தை நிறுத்தும் வழி தெரியாது திண்டாடுகிறான்.
இதே நேரத்தில் மீனாவிற்கு கிருஷ்ணன் மீதான எண்ணமும் ஆவலும் வலுபெறுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணனை வற்புறுத்துகிறாள் மீனா. அம்மாவுடன் நின்று பேசகூட பயப்படும் மீனா தன் வாழ்கையை தன் இஷ்டபட்டவனுடன் தான் வாழ வேண்டும் என முதல் முறையாக முடிவெடுக்கிறாள். தன் உடுத்தும் உடை விஷயத்தில் கூட அம்மாவிடம் அறிவுரை கேட்டும் அவள் தன் வாழ்க்கை துணையை தாமாக தேர்வு செய்கிறாள்.
இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உரையாடல்களுடன் பயணிக்கிறது இந்த நாவல். இறுதியாக மீனாவின் ஆசை நிறைவேறியதா? மீனாவின் அம்மா கிருஷ்ணனை பழைய பகை மறந்து ஏற்றுகொண்டாரா? என்பதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.
ஒவ்வொருவரின் மன நிலையையும் கண்ணாடி போல் காட்டியுள்ளார் ஆசிரியர். நாவல் முடியும் போது ஏதோ ஒரு சொந்தம் என்னிடம் விடைபெற்று செல்வது போல உணரமுடிந்தது.
நாவலில் வரும் சில வரிகள்:
"இருபது வருடங்களாக எங்க அம்மாவின் சொசைட்டியில்
நான் கற்றுக் கொள்ளாத, புரிந்து கொள்ளாத பல
விஷயங்களை இங்கே கவனிக்க முடிந்தது. அவை ரொம்ப சின்னச் சின்ன விஷயங்களாக இருக்கலாம்.
சாதாரண வாழ்க்கையில் அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றின் பாதிப்பு
நம்மையும் அறியாமல் நம்மீது பதிந்து விட்டிருக்கும்.
நான் வந்த ஓரிரண்டு நாட்களில் அத்தைக்கும் ராஜேஸ்வரிக்குமிடையே
உள்ள பந்தம் எவ்வளவு மென்மையானதோ, எவ்வளவு உயர்வானதோ புரிந்து கொண்டேன். அத்தை சுபாவத்திலேயே குறைவாக
பேசுபவள். வீட்டு விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது பெரிய மகனிடம் சொல்வதைத் தவிர மற்ற
நேரங்களில் பேசியோ, பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது போலவோ என் கண்ணில் படவில்லை."
இந்த நாவலில் என்னை கவர்ந்த கதாபாத்திரங்கள்: கிருஷ்ணன் - இவனை பற்றி அதிகம் நான் சொல்லவில்லை. ஆனால் அவனின் தெளிவான முடிவெடுக்கும் திறன், ஆழ்ந்த ஆறிவு நம்மை அவன் பக்கமாக ஈர்க்கிறது. "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" - படித்தால் மட்டும் போதாது, அயராத உழைப்பும் வாழ்க்கைக்கு அவசியம் என்பதற்கு எடுத்துகாட்டு - கிருஷ்ணன்.
அடுத்து மீனா: புத்திசாலி பெண். அம்மாவின் கண்ணுக்கு மட்டும் அவள் எப்போதும் அசடு மக்கு.. ஏனோ அம்மாவின் முன்னிலையில் அவளுக்கு முதுகெலும்பே இருபதாக தெரிவதில்லை. சில நேரங்களில் நமக்கே கோவத்தை வரவழைக்கும் ஒரு கதாபாத்திரம் இவள்.
இறுதியாக ஆனந்த ராவ்: அமைதியாக அதிகம் வலம் வராவிட்டாலும், மகளின் மீது மிகுந்த அக்கறையும், மனைவிக்காக மகளின் ஆசையை கூட நிராகரிக்கும் ஒரு கணவனாக வருகிறார். உயிர்ப்பான ஒரு கதாபாத்திரம்.
இதுபோல் பல நல்ல கதாபாத்திரங்களுடன் எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காமல், சலிப்பை ஏற்படுத்தாமல் பயணிக்கும் இந்த நாவல் இரு பாகங்களாக வெளிவந்துள்ளது.
புத்தகம் கிடைக்கும் இடம்: Alliance Company, 244 RKMutt Road, Mylapore, Chennai. 600004, 044 2464 1314.
திருமதி கௌரி அவர்களின் எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் மேற்சொன்ன பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தவை.
இந்த அருமையான நாவலை நேரம் கிடைப்பின் வாங்கி படிக்கவும். மேலும் இவர்கள் மொழிபெயர்த்த மற்றொரு நாவலான செக்ரட்டரி பற்றி பின்னர் பகிர்கிறேன். இந்த நாவலும் திருமதி. யத்தன பூடி சுலோச்சனா ராணி அவர்களின் படைப்பு.
அன்புடன்
சமீரா.