Ads 468x60px

Thursday, February 14, 2013

அன்பிற்கு ஒரு தினம்!!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!

ஆமா! நாடு இருக்கற நிலையில இது ஒண்ணுதான் குறைச்சல்ன்னு நீங்க சொல்றது எனக்கு நல்லா கேட்குது!! கொஞ்சம் ரிலாக்ஸ் பணிக்கலாம்னு தான்!!

பார்ட்டி வச்சி ரோஜா பூ கொடுத்து கொண்டாடறாங்களே அது உண்மையில காதலர் தினமே இல்லைங்க!! பரஸ்பர அன்பு விட்டுகொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சி நடந்துக்கற (மிதிச்சி நடந்துக்கற) கணவான்களும் மனைவிகளும் கூட காதலர் தினத்த கொண்டாடலாம். சொல்லபோன திருமணத்துக்கு அப்புறம் வர்றதுதான் பாராட்டப்படவேண்டிய, போற்றபடவேண்டிய காதல்!!   

அதனால திருமணமானவங்க தங்களோட துணைகளுக்கு, பெண்ணாக இருந்தால் கணவர்களுக்கு  ஒரு கிரீடிங் கார்டும், ஆண்கள் மனைவிகளுக்கு தங்களின் கிரெடிட் கார்டுகளையும் (கிரெடிட் கார்டு இல்லன்னா என்ன பண்றதா? டெபிட் கார்டு கொடுங்க) இன்றைய தினத்தில் கொடுத்து ஆனந்த கடலில் ஆழ்த்துங்க...


இப்போ ஒரு அழகான கவிதை தொகுப்பை உங்களோட பகிர்ந்துகொள்கிறேன்...

என் மீது எவ்வளவு 
பிரியம் வைத்திருக்கிறாய்
என்றேன் 
கடலை பார்த்துக்கொண்டே...

ஒரு புருவ உயர்த்தலில்
வானத்தை காட்டினாய்
அப்போது!!
(அடடா....)

எனக்கு பிடித்த 
எல்லா பாடல்களையும் 
உன் ஐ-பாடல் வைத்திருக்கிறாய்!

என்னை உனக்கு பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே  
வைத்திருக்கிறாய்!
(பாவம் பையன்.. இளையராஜா, AR ரகுமான் பாடல்கள் எல்லோருக்குமே பிடிக்கும்)

கோவில் தூணருகே 
உன் தந்தையோடு நின்று 
கொண்டிருந்தாய்..
யாரோ போல் நடக்கும் 
எனக்கு வழிவிட்டு 
ஒதுங்கி நிற்கும் 
அவருக்கு தெரியாது 
உன்னை கடப்பது ஒன்றும் 
அவ்வளவு எளிதல்ல 
என்பது!
(அகலவாக்கில வளந்துடங்களோ!!)

நாம் சுற்றியலைந்த 
சாலைகளில்
நம் பிள்ளைகளோடு
மீண்டும் பயணிக்க 
வேண்டும்...
நம் காதலுக்கு சாட்சியாய் நின்ற 
மரங்களும், சாலைகளும்
நம் காதலின் சாட்சிகளை 
பார்க்கட்டுமே!!  
 (ஐயோ.. இப்பவே பசங்களுக்கு ட்ரைனிங்-கா??) 

எப்போது புதிய அலைபேசி 
வாங்கினாலும் 
உன்னை முதலில் அழைத்து 
விடுகிறேன் ....

உன் பெயரையே 
முதலில் எழுதி பார்க்கிறது 
புதுப் பேனா!

வாழ்க்கை தொழிலில் கடவுள் 
எனக்கு போட்ட 
"முதல்" நீ!
(ஐயோ பாவம்? - வங்கிகள்!)

நீ என்னை காதலிக்கிறாயா 
என்ற கேள்விக்கான 
விடையை
எத்தனையாவது மலையைத் 
தாண்டி 
எந்தக் கடலுக்கடியில் 
எந்த கிளியின் இறக்கையில் 
வைத்திருக்கிறாய்!
(தெலுங்குப் பட பழைய டைரக்டரை அணுகவும்)

மணியோசையோடு நம்மை 
கடக்கிறது
தீயணைப்பு வண்டி..
உள்ளிருக்கும் நீர் தளும்பி 
கொஞ்சமாய் நனைக்கிறது
உன்னை!
தீ மெல்ல பற்றுகிறது 
என்னை!!
(இதுக்கு பூ(வை)அணைப்பு வண்டி தான் வரணும்) 

இத்தனை நாட்களாக 
காதலித்துக் கொண்டிருக்கிறோம் 
இன்னமும் என்ன 
புதிதாய் கொஞ்சல் என்கிறாய்..

அதே நாசி 
அதே காற்று
நொடிக்கு நொடி புதிதாய் 
சுவாசிப்பதில்லையா!
(வாவ்!! எக்ஸ்செல்லன்ட் - இனிமே யாராவது சலிச்சிக்குவீங்க??)

நீ 
காட்டி கொடுத்து விடுவாயோ 
என பயந்து பயந்து 
வெற்றுத்தாளை மடக்கி
உன் முன்னே போட்டேன்!

எடுத்துப் பிரித்து 
உதடு பிதுக்கி 
ஒன்றுமில்லையென நீ 
சிரித்த நொடியில்
பூத்தது தான் 
நம் காதல்! 
(மாவீரன்...)

கடற்கரை ஈர மணலில் 
நம் பாதங்களை பதித்து 
அதைச் சுற்றிலும் நீ வைத்த
சங்குகளில் ஒன்றை 
பத்திரமாக எடுத்து 
வைத்திருக்கிறேன் 
நம் பிள்ளைக்கு பாலூட்ட!
(வாழ்க தன்னம்பிக்கை)

என்னதான் நான் கொஞ்சம்(?) கிண்டல் பண்ணி இருந்தாலும், கவிதை பார்த்தா பயந்து ஓடற என்னையும் இத்தொகுப்பு கவர்ந்ததென்பத்தில் ஐயமில்லை!! 

இந்த கவிதைகள் அனைத்தும் சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட நர்சிம் எழுதிய "உன்னை அழைத்துப் போக வந்தேன்" என்ற கவிதை தொகுப்பு நூலில் இருந்து உறுவப்பட்டவை!

வெளியிட்டோர்: பட்டாம்பூச்சி பதிப்பகம் 
முகவரி: 28/A , கிருஷ்ணன் கோயில் தெரு, திருநகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை - 600037.
கைபேசி: 9841003366 
விலை: ரூ. 40
மின்னஞ்சல்: pattampoochi2008@gmai.com 

ஒரு அழகான தன் காதல் அனுபவத்தை பற்றி நம்ம மூத்த பதிவர் எழுதியதை இங்க படிங்க!! அனுபவம் புதுமை........................

நன்றி : தினமலர் -வாரமலர் 

அன்புடன், 
சமீரா..

இன்னும் நடக்க... "அன்பிற்கு ஒரு தினம்!!"